வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கிட வாக்களிப்பது முக்கியத்துவமானது கலெக்டர் பேச்சு

வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கிட வாக்களிப்பது முக்கியத்துவமானது என கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.
வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கிட வாக்களிப்பது முக்கியத்துவமானது கலெக்டர் பேச்சு
Published on

திருவண்ணாமலை,

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக முதல் முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆனந்த திருமண மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் கல்லூரி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விழிப்புணர்வு ரங்கோலி மற்றும் கோலங்களை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் வாக்குப்பதிவு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியினையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு கை ரேகைகள் பதிவு (ha-nd im-p-r-ess-i-on) செய்து உறுதி ஏற்கும் இயக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் கை ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் மூலமாக நடைபெற்ற வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், நடனம், நாடகம் ஆகிய வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம். ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என உறுதி மொழிகிறோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும், ரங்கோலி மற்றும் மெகந்தி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கே.எஸ். கந்தசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசுகையில், கல்லூரி மாணவர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கிட வாக்களிப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுடைய 42 ஆயிரத்து 561 வாக்காளர்கள் உள்ளனர். இது நமது மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 2.15 சதவீதமாகும். மக்கள் தொகையின் அடிப்படையில் நமது நாட்டின் பிறப்பு வீதம் 13 சதவீதம் ஆகும். நாம் ஏன் ஓட்டு போட வேண்டும் என இருக்கக் கூடாது. கண்டிப்பாக அனைவரும் வாக்களிக்க வேண்டும். இந்தியா ஜனநாயக நாடு, வாக்களிப்பது உங்களது பொறுப்பு ஆகும்என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி)பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, உதவி கலெக்டர்கள் மைதிலி (ஆரணி), ஸ்ரீதேவி (திருவண்ணாமலை), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஏ.என்.லாவண்யா மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com