3 பேர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம்: மதசாயம் பூசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

பால்கரில் 3 பேர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மத சாயம் பூசுபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.
3 பேர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம்: மதசாயம் பூசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
Published on

மும்பை,

பால்கர் மாவட்டம் கடக்சின்சாலே பகுதியில் கடந்த 16-ந் தேதி இரவு 2 சாமியார்கள் உள்பட 3 பேரை கொள்ளையர்கள் என நினைத்து 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அடித்து கொலை செய்தனர்.

கொலையானவர்கள் மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்தவர்கான சாமியார்களான சிக்னி மகாராஜ் (வயது 70), சுசில்கிரி மகாராஜ் (35) மற்றும் கார் டிரைவர் நிலேஷ் தெல்கடே (30) என்றும், இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள குஜராத் மாநிலம் சூரத்துக்கு காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடந்தது தெரியவந்தது.

மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு சிலர் மதசாயம் பூசி சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உயர் மட்ட கமிட்டியை அமைத்து உள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறுகையில், "பால்கரில் 3 பேர் கொல்லப்பட்டது வெட்ககேடான செயல். இந்த கொடூரத்தை செய்தவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அதேபோல உண்மைக்கு புறம்பாக மத சாயம் பூசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடமும் வலியுறுத்தினேன். குற்றவாளிகள் மீது எனது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதையும் அவரிடம் கூறியுள்ளேன்" என்றார்.

இதேபோல இந்த சம்பவம் குறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறும்போது, " பால்கரில் தாக்கப்பட்டவர்களும், தாக்கியவர்களும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள். பால்கர் சம்பவத்தை வைத்து இருசமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் யாராவது கருத்து பதிவிட்டால் நடவடிக்கை எடுக்க மாநில போலீசார், சைபர் குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

இதற்கிடையே 3 பேரை அடித்து கொலை செய்தவர்களில் பெரும்பாலானோர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் என்று மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com