

பெங்களூரு,
கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் 2 பேரும் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், விற்பனையாளர்கள் பலருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. நடிகைகள் ராகிணியும், சஞ்சனாவும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டதால், தற்போது தனித்தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் ராகிணி, சஞ்சனா சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பது, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதையடுத்து, கோர்ட்டு அனுமதியுடன் பரப்பனஅக்ரஹாராவுக்கு சென்று நடிகைகள் ராகிணி, சஞ்சனாவிடம், அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், நடிகைகள் 2 பேரும் தங்களது வருமானத்தை காட்டிலும், அதிகஅளவில் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
நடிகைகளிடம் விசாரிக்க முடிவு
இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு, அமலாக்கத்துறையினர் முழு விவரங்களையும் அளித்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஆகிய 2 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சஞ்சனா குறைவான படங்களில் நடித்ததுடன், குறைந்த அளவே சம்பளம் வாங்கி வந்திருந்தார். ஆனால் தற்போது அவருக்கு பல கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதுபோல, நடிகை ராகிணியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நடிகைகள் 2 பேரும் முறையாக வரி செலுத்தி உள்ளார்களா?, அவர்களிடம் இருக்கும் சொத்துகளின் விவரங்களை வருமான வரித்துறையிடம் சரியாக சமர்ப்பித்துள்ளனரா?, அந்த சொத்துகளை சேர்த்தது எப்படி? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. மேலும் கோர்ட்டு அனுமதி பெற்று சிறைக்கு சென்று 2 நடிகைகளிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.