கோடை வெயிலின் தாக்கத்தால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம்

கோடை வெயிலின் தாக்கத்தால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.
கோடை வெயிலின் தாக்கத்தால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம்
Published on

ஊட்டி,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டது. போக்குவரத்து வசதி எதுவும் இல்லாத அந்த காலத்தில், மலைகளை குடைந்து ரெயில் பாதை அமைக்கப்பட்டது. கல்லாரில் இருந்து குன்னூர் வரை ரெயில் தண்டவாளத்தின் நடுவில் பல்சக்கர பட்டை பொருத்தப்பட்டு இருக்கிறது. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை ரெயில் பாதை 46 கிலோ மீட்டர் ஆகும். இதில் 212 வளைவுகள், 16 குகைகள், 31 பெரிய பாலங்கள், 219 சிறிய பாலங்கள் உள்ளன.

கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயில் மற்றும் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவடைந்து உள்ளது. மேலும் சமவெளி பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரித்து விட்டது. இதனால் குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கி உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஊட்டி ரெயில் நிலையத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

அவர்கள் மலை ரெயிலில் பயணிக்க டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் ரெயில் வரும் வரை இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். அதனை தொடர்ந்து குன்னூரில் இருந்து ஊட்டியை நோக்கி மலை ரெயில் வந்தது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் வரிசையாக ரெயிலில் ஏறி செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். முன்னதாக அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள பழமை வாய்ந்த நீராவி என்ஜினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

ஊட்டி மலை ரெயிலில் சென்றபடி கேத்தி பள்ளத்தாக்கு, தேயிலை தோட்டங்கள், இயற்கை எழில் மிகுந்த காட்சிகள், பசுமையான மரங்கள், மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டம் மற்றும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மலை ரெயில் பயணம் அவர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று உள்ளது. குகையை ரெயில் கடந்து செல்லும் போது, சுற்றுலா பயணிகளுக்கு திகில் அனுபவம் கிடைக்கிறது. அவர்கள் ரெயில் முன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதேபோல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com