சக்லேஷ்புரா-சுப்பிரமணியா இடையே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

சுப்பிரமணியா-சக்லேஷ்புரா இடையே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.
சக்லேஷ்புரா-சுப்பிரமணியா இடையே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்
Published on

ஹாசன்,

கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் பருவமழை ஆரம்பித்தது. பெங்களூரு நகர், ஹாசன், மண்டியா, குடகு, தட்சிண கன்னடா, உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பின. ஹாசன் மாவட்டத்தில் சக்லேஷ்புரா, அரக்கல்கோடு தாலுகாக்களில் தான் அதிக மழை பெய்தது. அரக்கல்கோடு தாலுகாவில் பெய்த கனமழைக்கு ராமநாதபுரா என்ற கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. அங்கு வசித்து வந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அதற்கு அடுத்தபடியாக சக்லேஷ்புரா தாலுகாவில் பெய்த கனமழைக்கு சக்லேஷ்புராவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா சுப்பிரமணியாவுக்கு வனப்பகுதியின் வழியாக செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

மேலும் பாறாங்கற்களும் தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து பெங்களூரு-மங்களூரு ரெயில் சேவை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சக்லேஷ்புரா-சுப்பிரமணியா இடையே தண்டவாள சேதங்களை சீரமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் தண்டவாளத்தில் விழுந்த மண்ணை அகற்றும் பணி நடந்து வருகிறது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூடிய விரைவில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com