ஊரடங்கு தளர்விற்கு பிறகு குமரியில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்

ஊரடங்கு தளர்விற்கு பிறகு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊரடங்கு தளர்விற்கு பிறகு குமரியில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்
Published on

நாகர்கோவில்,

தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கி.மீ தூரத்துக்கு ரெயில்வே இருப்புப்பாதை வழித்தடங்கள் உள்ளன. நாட்டின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான ரெயில் வழி தடம் ஆகும்.

இந்த வழி தடம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது. தென்மாவட்டத்தில் இருந்து இயங்கும் அனைத்து ரெயில்களும் இந்த வழியாகத் இயக்கப்படுகின்றன.

மீண்டும் பணிகள் தொடங்கியது

தற்போது சென்னை முதல் மதுரை வரை 490 கி.மீ. இரட்டை ரெயில் பாதையாக உள்ளது. இதே போல் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை 50 கி.மீ இரட்டை ரெயில் பாதையாக இருக்கிறது. கன்னியாகுமரி முதல் மதுரை வரை உள்ள ரெயில் பாதையை இரட்டை பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85 கி.மீ பாதையை இரட்டை பாதையாக மாற்ற ரூ.900 கோடி என திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த திட்டத்தை தெற்கு ரெயில்வேயின் கீழ் உள்ள கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இரட்டை பாதை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் ஆகிய இடைப்பட்ட பகுதியில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கி தீவிரமாக நடக்கிறது.

நடைமேடை

இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுவதால் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் கூடுதலாக நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக கூடுதலாக ரெயில்கள் நின்று செல்லும் வசதி ஏற்படும். விசாலமாக அமைக்கப்படும் இந்த நடைமேடையில் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் மற்றும் நிழற்குடைகள் அமைக்கும் பணி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com