மேகதாது அணை பிரச்சினை: அனைத்து கட்சிகளின் போராட்டம் வெற்றி பெறும் ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு

மேகதாது அணை பிரச்சினையில் அனைத்து கட்சிகளின் போராட்டம் வெற்றி பெறும் என்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மேகதாது அணை பிரச்சினை: அனைத்து கட்சிகளின் போராட்டம் வெற்றி பெறும் ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு
Published on

திருச்சி,

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு தனது அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்றும், கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன்(வடக்கு), சங்கர்(தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்றும், அதற்கு அனுமதி அளித்ததை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் எனவும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:-

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின்மூலம் நிரந்தரமாக்கி உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணைகள் கட்டினாலும் அதை காவிரி மேலாண்மை ஆணையம்தான் முடிவு செய்யும். அதை மீறி கர்நாடக அரசு காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் முடிந்துபோன ஒரு விஷயத்தை கர்நாடக அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறையும் அனுமதி வழங்கி இருக்கிறது.

கர்நாடக அரசு மீண்டும் காவிரி பிரச்சினையை கிளப்புவது சரியானதல்ல. இதனால், இருமாநில விவசாயிகளுக்கும் பிரச்சினை ஏற்படும். காங்கிரஸ் கட்சியும், குமாரசாமியும் அரசியல் ஆதாயத்துக்காக இதை கையில் எடுத்துள்ளனர். இந்த திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. இருமாநில நலன்களையும் அக்கட்சி கருத்தில் கொள்ள வேண்டும். மாறாக, மேகதாது அணை விஷயத்தில் இந்த அளவுக்கு தீவிரம் காட்டுவது ஏன்?. இந்தியாவை மீண்டும் ஆள நினைக்கும் காங்கிரஸ் அரசு இதுபோன்று செயல்படுவது முறையானது அல்ல.

மேகதாது அணை விஷயத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏனென்றால், மத்திய அரசு அனுமதி அளித்ததாக அறிவிப்பு வந்தவுடனேயே எதிர்த்து வழக்கு தொடர்ந்து விட்டது. தமிழகத்தில் மேகதாது அணைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகள் தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்தோ போராட்டம் நடத்தினாலும் அது ஒரு புள்ளியை நோக்கியதே. எனவே, நிச்சயம் அந்த போராட்டம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார்(துறையூர்), பிச்சமுத்து(திருவெறும்பூர்), இளையராஜா(மணப்பாறை), விஜயகுமார்(தொட்டியம்) மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com