மே 8-ந்தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு முடிவு

தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம்.
மே 8-ந்தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு முடிவு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளருமான தாஸ் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு 11 மண்டலங்களாக பிரித்து மக்கள் மற்றும் அரசு அலுவலர்களிடம் எங்களது கோரிக்கை தொடர்பான பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிலுவை தொகைகளை பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நிலுவை தொகை வழங்கவில்லை. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினரை அழைத்து பேச முன்வரவில்லை. தமிழக அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களை ஒன்று திரட்டி வரும் மே மாதம் 8-ந்தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com