கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடும்: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடும்: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
Published on

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

விவசாய கடன் தள்ளுபடி

காங்கிரஸ் கட்சியுடன் நடந்த கூட்டணி ஆட்சியில் 14 மாதங்கள் முதல்-மந்திரியாக இருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் என்னால் முடிந்த வளர்ச்சி பணிகளை மேற்கொண்டேன். விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினேன். விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தேன். விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியில் கடன் பெற நடவடிக்கை எடுத்தேன். விவசாயிகளுக்கு மட்டுமே எனது தலைமையிலான ஆட்சியில் நல்லது செய்ததாக கூறுகிறார்கள்.

அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டேன். மக்களின் படிப்புக்காக ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் கொடுத்து தங்களது பிள்ளைகளை சேர்க்க முடியாத பெற்றோர், எனது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க தயாராக உள்ளனர்.

3 தொகுதிகளில் போட்டி

கூட்டணி ஆட்சியில் இன்னும் என்னால் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும். அதற்கு கூட்டணி தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதனால் கூட்டணி முறிந்தது. இனிவரும் நாட்களில் யாருடனும் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைக்காது. கட்சியை வளர்க்கும் பணியில் நான் உள்பட அனைத்து தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஜனதாதளம் (எஸ்) கட்சி பலப்படுத்தப்படும். தொண்டர்களே கட்சியின் பலம். இனிமேல் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலை நமக்கு வராது. எனது தலைமையிலான 14 மாத ஆட்சி பற்றி காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். மக்களுக்கு தெரியும். எனது தலைமையிலான அரசு வளர்ச்சி பணிகளை மட்டுமே கவனம் செலுத்தியதை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடாது என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு இதில் என்ன சந்தோஷம் இருக்கிறது. அவர் எதற்காக ஜனதாதளம் (எஸ்) கட்சி பற்றி சிந்திக்க வேண்டும். மஸ்கி, பசவ கல்யாண், சிந்தகி ஆகிய 3 தொகுதிகளுக்கும் நடைபெறும் இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடும். 3 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். வடகர்நாடக மாவட்டங்களிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி பலப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com