சிறுபான்மையின தலைவர்களை இழுக்க ஜனதாதளம்(எஸ்) தீவிரம்

ஜமீர் அகமதுகான் கட்சியில் இருந்து விலகியதால் சிறுபான்மையின தலைவர்களை கட்சிக் குள் இழுக்க ஜனதா தளம்(எஸ்) தீவிரம் காட்டி வருகிறது.
சிறுபான்மையின தலைவர்களை இழுக்க ஜனதாதளம்(எஸ்) தீவிரம்
Published on

பெங்களூரு,

மந்திரி தன்வீர் சேட், சி.எம்.இப்ராஹிமிடம், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். குறிப்பாக ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினத்தினருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என்று குமாரசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சிறுபான்மையின தலைவராக ஜமீர் அகமதுகான் இருந்து வந்தார். ஆனால் அவர் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.

தற்போது அக்கட்சியில் சிறுபான்மையினத்தை சேர்ந்த பெரிய தலைவர்கள் யாரும் இல்லை என்று அக்கட்சியினர் கருதுகிறார்கள். இதன் காரணமாக காங்கிரசில் உள்ள சிறுபான்மையினத்தை சேர்ந்த தலைவர்களை, ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு இழுக்க குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, முதல்-மந்திரி சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளரும், மேல்-சபை உறுப்பினருமான சி.எம். இப்ராஹிமை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்குள் இழுக்க, அவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் சி.எம்.இப்ராஹிமும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மாநில தலைவர் குமாரசாமியை சந்தித்து பேசினார்.

இதனால் சி.எம்.இப்ராஹிம் காங்கிரசில் இருந்து விலகி ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சேர போவதாக தகவல் வெளியானது. அதுதொடர்பாக அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சி.எம்.இப்ராஹிமை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு இழுக்க குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுபோல, முதல்-மந்திரி சித்தராமையாவின் மந்திரிசபையில் தொடக்க கல்வித்துறை மந்திரியாக உள்ள தன்வீர் சேட்டை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு இழுக்கும் முயற்சிகளும் சத்தம் இல்லாமல் நடந்து வருவதாகவும் தெரிகிறது. மந்திரி தன்வீர் சேட்டை காங்கிரஸ் கட்சி தலைவர்களும், முதல்-மந்திரி சித்தராமையாவும் புறக்கணித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் ராய்ச்சூர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்த தன்வீர் சேட்டிடம் இருந்து, அந்த பதவி பறிக்கப்பட்டு போக்குவரத்து மந்திரியாக உள்ள எச்.எம். ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் முதல்-மந்திரி மீது தன்வீர்சேட் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவரை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு இழுக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றன. இதுபோன்று, முன்னாள் மத்திய மந்திரி ரகுமான் கான் உள்ளிட்ட சிறுபான்மையின தலைவர்களை ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு இழுக்க குமாரசாமி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com