தாசில்தார் வீட்டில் நகை-பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தாசில்தார் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாசில்தார் வீட்டில் நகை-பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் தாசில்தார் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் நாகல்நகர் பால்சாமிசத்திரம் பகுதியை சேர்ந்தவர் தாஜுதீன் (வயது 54). இவர், பழனியில் சமூக நலத்துறை தனித்தாசில்தாராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் தாஜுதீன் குடும்பத்தினர் தூங்கினர். அதிகாலை 3.30 மணி அளவில் தாஜுதீன் தூக்கம் கலைந்து கண் விழித்துள்ளார். அப்போது வீட்டின் அறை கதவு திறந்து கிடந்ததை பார்த்தார்.

இதையடுத்து அவர் பக்கத்து அறைக்கு சென்று பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தார். அந்த அறையில் இருந்த பீரோக்கள் திறந்து கிடந்தன. மேலும் அறை முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. உடனே தனது மனைவி சாகிராபானுவை எழுப்பி நடந்ததை கூறினார். அப்போது சாகிராபானு கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை காணாதது குறித்து தாஜுதீன் கேட்டார்.

அந்த தங்க சங்கிலியை கழற்றி படுக்கைக்கு அருகே வைத்ததாக அவர் கூறினார். ஆனால், படுக்கையின் அருகே அவர் கூறிய இடத்தில் தங்க சங்கிலியை காணவில்லை. இதேபோல் சாகிராபானுவின் கைப்பை, தாஜுதீன் பணம் வைத்திருந்த பேண்ட் ஆகியவற்றை காணவில்லை. அதை தேடிய போது வீட்டின் மொட்டை மாடியில் கைப்பை, பேண்ட் கிடந்தன. ஆனால், அவற்றில் இருந்த ரூ.10 ஆயிரத்தை காணவில்லை.

மேலும் மொட்டை மாடியில் இருந்து வீட்டுக்குள் வரும் படிக்கட்டின் கதவு பூட்டாமல் விட்டது நினைவுக்கு வந்தது. நள்ளிரவில் மொட்டை மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் தாஜுதீன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனியம்மாள் சம்பவ இடத்துக்கு வந்தார். பின்னர் அவர், வீட்டில் பதிவாகி இருந்த திருடர்களின் ரேகைகளை பதிவு செய்தார். இந்த திருட்டு குறித்து போலீசார்வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com