மாவட்டம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம்
Published on

திருவண்ணாமலை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தது.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.ஆறுமுகம் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாமல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

மேலும் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால் மூடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தபட்ட பள்ளிகளை திறந்து அருகில் உள்ள பள்ளிகளில் இருந்த ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 சதவீத ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரணி

ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கழக வட்டத்தலைவர் என்.சொக்கலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் எம்.புருஷோத்தமன், எம்.அமுதா, ஆர்.பரசுராமன், ராஜா, மா.பாக்கியநாதன், ஆர்.சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ - ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர் கி.திருமால் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.லட்சுமணன் கலந்துகொண்டு பேசினார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டக்கிளை பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

போளூர்

போளூரில், மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ரவிச்சந்திரன், ராஜேஷ், படவேட்டான், மாநில செயற்குழு உறுப்பினர் டேவிட்ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தினால் போளூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் குறைந்த அளவு ஆசிரியர்கள் கொண்டு இயங்கின. தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் சில மூடப்பட்டன. ஊராட்சி ஒன்றியம், வட்டார வள மையம், கருவூலம் ஆகிய அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல செய்யாறு, வந்தவாசி உள்பட மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com