பேரவை விரைவில் கட்சியாக மாற்றப்படும் திருச்சி பொதுக்கூட்டத்தில் ஜெ.தீபா பேச்சு

எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை விரைவில் கட்சியாக மாற்றப்படும் என்று திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெ.தீபா கூறினார்.
பேரவை விரைவில் கட்சியாக மாற்றப்படும் திருச்சி பொதுக்கூட்டத்தில் ஜெ.தீபா பேச்சு
Published on

திருச்சி,

மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம், திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. கூட்டத்திற்கு பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தலைமை தாங்கினார். திருச்சி மாநகர், மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.சி.கோபி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஜெ.தீபா பேசியதாவது;

தற்போது ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இயக்கத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகவே தான், நான் கடந்த ஆண்டு ஜெயலலிதா பிறந்தநாளில் பேரவையை தொடங்கினேன். அரசியலில் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால் அவர் விட்டுச்சென்ற மக்கள் நலப்பணிகளை நான் செய்வேன்.


மத்திய அரசின் தலையீட்டால் தான் இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வத்திடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் வழங்கப்பட்டது. பா.ஜ.க. அரசின் கைக்கூலியாக தான் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசிடம் அடிமைப்பட்டு இருக்கும் இந்த ஆட்சி தேவையா என்று பொதுமக்கள் கேட்க வேண்டும்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை என்று கூறி, யாரோ ஒருவருடைய சிலையை திறந்து வைத்துள்ளனர். தற்போது சிலர் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார்கள். அவர்கள் சினிமாவில் வருவது போல் ஒரே நாளில் முதல்அமைச்சர் ஆவார்களா? அல்லது டெல்லியின் தர்பார் ஆட்சியை இங்கு நடத்த போகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


எத்தனை தடைகள் வந்தாலும் என்னுடைய லட்சிய பாதையை விட்டுவிட மாட்டேன். அ.தி.மு.க.வின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் இந்த பேரவையானது, நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் கட்சியாக மாற்றப்படும்.

இவ்வாறு ஜெ.தீபா பேசினார்.

இதனைத்தொடர்ந்து தீபா, ஜெயலலிதா பிறந்த நாள் கேக்கை வெட்டி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளும், ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, சேலைகளை வழங்கினார். இதில் விழாக்குழு அமைப்பாளர்கள் திருச்சி மாவட்ட செயலாளர் ஷாஜகான், தில்லைநகர் பகுதி செயலாளர் ஹாரூன், பாலக்கரை பகுதி செயலாளர் அமலாபாபுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் வரவேற்றார்.


இதனைத்தொடர்ந்து ஜெ.தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி நடத்தி வரும் விசாரணை சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிகிறது. இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள எந்த கட்சிகளும் போராடவில்லை. ஜெயலலிதா அறிவித்த திட்டமான மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com