இளஞ்சிறார் நீதி–பராமரிப்பு சட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நீதிபதி தலைமையில் நடந்தது

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நேற்று தமிழகம் முழுவதும் இளஞ்சிறார் நீதி மற்றும் பராமரிப்புச் சட்டம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவை பற்றிய ஆலோசனைக் கூட்டம் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது.
இளஞ்சிறார் நீதி–பராமரிப்பு சட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நீதிபதி தலைமையில் நடந்தது
Published on

நாகர்கோவில்,

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நேற்று தமிழகம் முழுவதும் இளஞ்சிறார் நீதி மற்றும் பராமரிப்புச் சட்டம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவை பற்றிய ஆலோசனைக் கூட்டம் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. இதேபோல் குமரி மாவட்டத்துக்கான ஆய்வுக்கூட்டம் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு குமரி மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.சதிகுமார் தலைமை தாங்கி, இளஞ்சிறார்கள் நீதி மற்றும் பராமரிப்பு சட்டம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவை குறித்தும், குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும் விளக்கி பேசினார்.

மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதியும், மாவட்ட மக்கள்நீதிமன்ற தலைவருமான ஜாண் ஆர்.டி.சந்தோசம் சிறப்புரையாற்றினார். சார்பு நீதிபதியும், மாவட்ட சட்ட உதவி மைய செயலாளருமான பசும்பொன் சண்முகையா வரவேற்று பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை அறிமுகம் செய்து பேசினார். இளஞ்சிறார் நீதி வாரியத்தின் முதன்மை மாஜிஸ்திரேட்டு பாரதி தேவி, கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசினர். முடிவில் சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அதிகாரி வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி எஸ்.முருகானந்தம், முதன்மை உரிமையியல் நீதிபதி எம்.உதயவேலவன், போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com