கடமலை-மயிலை ஒன்றியத்தில் 3 கிராமங்களை தூய்மையாக மாற்ற திட்டம்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய கிராமங்களில் ஒவ்வொன்றிலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் 3 கிராமங்களை தூய்மையாக மாற்ற திட்டம்
Published on

கடமலைக்குண்டு,

இந்த கிராமங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் நாள்தோறும் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் துப்புரவு தொழிலாளர்களிடம் அளித்த குப்பைகளை தவிர்த்து பகல் நேரங்களில் வீடுகளில் சேரும் குப்பைகளை பொதுமக்கள் தெருவோரங்களிலும், சாக்கடை வடிகால்களிலும் கொட்டி வருகின்றனர். குறிப்பாக கடைகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து பகல் நேரங்கள் அதிக அளவில் குப்பைகள் சாலையில் வீசப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களை தூய்மையானதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாவட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய ஆணையர்கள் சரவணன், ஜெகதீசசந்திரபோஸ், ஊராட்சி செயலாளர்கள் துரைப்பாண்டி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கிராமங்களில் பகல் நேரங்களில் குப்பைகள் சேருவதை தடுக்கும் முறைகள் குறித்து பேசப்பட்டது.

முதற்கட்டமாக கடமலைக்குண்டு கிராமத்தில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு தனித்தனியாக மாத கட்டணம் நிர்ணயம் செய்வது எனவும், தெருப்பகுதி மற்றும் கடைகள் அதிகம் உள்ள சாலை ஓரங்களில் குப்பை தொட்டிகள் அதிக அளவில் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

காலை நேரங்களில் வழக்கம் போல துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று குப்பைகளை பெற்று கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் குப்பை தொட்டிகளில் சேரும் குப்பைகளை டிராக்டர்கள் மூலம் அகற்ற வேண்டும் என துப்புரவு பணியாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் இந்த பணிகளுக்காக கடமலைக்குண்டுவில் கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர். நகர்புறங்களில் மட்டுமே குப்பைகளை அகற்ற வீடு மற்றும் கடைகளில் மாத கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தற்போது கிராம பகுதியில் முதற்கட்டமாக கடமலைக்குண்டுவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு விரைவில் தூய்மையான கிராமங்களாக மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கடமலைக்குண்டுவில் கொட்டப்படும் குப்பைக்கிடங்கில் பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com