ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நாகை, காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
Published on

நாகப்பட்டினம்,

நாகை அக்கரைப்பேட்டையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், விழுந்தமாவடி, காமேஸ்வரம், வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒகி புயலால் பெறும் சேதம் அடைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு உரிய மீட்பு பணியும், நிவாரணமும் வழங்காத மத்திய-மாநில அரசுகளை கண்டிப்பது. புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கேரளா அரசு மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட்டதுபோல தமிழக அரசும் செயல்பட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

பேரணி

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாளை (திங்கட்கிழமை) நாகை தலைமை தபால் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பது. இந்த பேரணிக்கு காவல் துறையிடம் அனுமதி கோருவது. வருகிற காலங்களில் ஆழ்கடல் தொழில் செய்வதற்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆழ்கடல் தொழில்பார்க்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனே நடவடிக்கை எடுக்க அரசு ஏற்கனவே அறிவித்தவாறு நாகையில் ஹெலிப்பேடுடன் கூடிய இந்திய கடற்படை தளம் அமைக்க வேண்டும். கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com