

பரமத்தி வேலூர்,
ஜேடர்பாளையத்தில் உள்ள படுகை அணை மேட்டூர் அணையில் இருந்து 51-வது மைல் தொலைவில் உள்ளது. ஜேடர்பாளையத்தில் இருந்து ராஜா வாய்க்கால் தொடங்கி, நன்செய் இடையாறு வரை 34 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இடையில் உள்ள விளை நிலங்கள் இதன்மூலம் பாசனம் பெறுகிறது.
ராஜா வாய்க்காலில் இருந்து பொய்யேரி வாய்க்கால் பிரிந்து 5 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதேபோல கொமராபாளையம் வாய்க்கால் 17.5 கிலோ மீட்டர் தூரமும், மோகனூர் வாய்க்கால் 25 கிலோ மீட்டர் தூரம் வரை செல்கிறது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் காவிரி மற்றும் ராஜா வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால்களில் இருந்து நீரேற்று பாசன சங்கங்கள் மூலம் புன்செய் நிலங்களும் பயன்பெற்று வருகிறது.
ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்கால் மூலம் திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக பாசன நிலங்களை சென்றடைவதில்லை. காவிரியின் நிலத்தடி மட்டம் குறைந்துள்ளதால், மோகனூர் வாய்க்காலுக்கு கடைமடை வரை தண்ணீர் செல்லாத முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டும், அடிக்கடி ராஜா வாய்க்கால் பகுதியில் உடைப்பு ஏற்பட்டும், இதனால் தண்ணீர் வீணாகி காவிரியாற்றுக்கு சென்றும் வந்தது.
மேலும் மதகுகள் அடிக்கடி பழுது ஏற்பட்டும் வந்தது. ராஜா வாய்க்காலில் உடைப்புகள் ஏற்படாதபடி வலது மற்றும் இடது புற கரைகளை கான்கீரிட் மூலம் கட்டப்பட்டு, மதகுகளை சீர் செய்து கடைமடை பகுதிவரை தண்ணீர் தடையின்றி செல்வதற்கு ஆவண செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் ராஜா, கொமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்கால்கள் சீரமைப்பு செய்து கான்கிரீட் மூலம் மதகுகள் மட்டும் சீர் செய்யப்பட்டது. மேலும் அனுமதியில்லாத நீரேற்று பாசன குழாய்களை அகற்றவேண்டும் எனவும், ராஜா வாய்க்காலை புதுப்பிக்க (ரீமாடலிங்) செய்யவேண்டும் எனவும் கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து விவாயிகள் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுப்பணித் துறையினர் ராஜா வாய்க்காலை புதுப்பிப்பதற்காக முதற்கட்டமாக ரூ.11 கோடிக்கும், இரண்டாம் கட்டமாக ரூ.145 கோடிக்கும் திட்டம் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் நிதி ஒதுக்கப்படாமல் இந்த திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் ரூ.185 கோடி மதிப்பீட்டில் ராஜா வாய்க்காலின் இருகரைகள் மற்றும் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு திட்டம் தயார் செய்து பொதுப்பணித் துறையினர் அனுப்பியுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் வினியோகத்திற்கு மட்டும் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் ராஜா வாய்க்காலுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தண்ணீர் இல்லாத காலத்திலேயே ராஜா வாய்க்கால் புதுப்பிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உரிய நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ராஜா வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்காலை முறையாக தூர்வாரி புதுப்பிக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக சட்ட மன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்து வந்தோம். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அனுமதி பெறப்படாத நீரேற்று பாசன கிணறுகளுக்கு செல்லும் சிறு வாய்க்கால்களை அகற்றவேண்டும். ராஜா வாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் அமைத்தால் தண்ணீர் இடையில் பிரியாமல் கடைசி வரை சென்றடையும். காவிரி மற்றும் ராஜா வாய்க்காலில் அனுமதி பெற்ற நீரேற்று பாசனதாரர்களுக்கு தனி மின்வழிப்பாதையும், குறிப்பிட்ட அளவீடு செய்து மதகுகள் அமைக்கவேண்டும். மேலும் பாண்டமங்கலம், பொத்தனூர் மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் சாக்கடை கழிவுநீர் ராஜா வாய்க்காலில் கலப்பதை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.