கன்னியாகுமரியில் பயன்பாட்டுக்கு வரும் மன்னர் கால தபால்பெட்டி

பொதுமக்களிடம் மீண்டும் கடிதம் எழுதும் பழக்கத்தை தூண்டும் விதமாக திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் உள்ள தபால் பெட்டியை கன்னியாகுமரியில் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் பயன்பாட்டுக்கு வரும் மன்னர் கால தபால்பெட்டி
Published on

கன்னியாகுமரி,

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் தற்போது இளைய தலைமுறையினர் முதல், முதியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் தகவல்களை பறிமாறிகொள்கிறார்கள். இதனால் கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருகிறது.

கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்த பொதுமக்களை கவரும் வகையில் தபால்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் குமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்து இருந்த போது கடிதம் அனுப்ப பயன்படுத்தப்பட்ட தபால் பெட்டிகள் இன்னும் மாவட்டத்தின் பல இடங்களில் நல்ல நிலையில் இருக்கிறது. அந்த தபால் பெட்டிகள் மக்களை கவரும் வகையில் வைத்து மீண்டும் கடிதம் எழுதும் நடைமுறையை ஊக்குவிக்க தபால்துறை முயற்சிகள் எடுத்து வருகிறது.

அதன்படி இரணியல் பகுதியில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் நிறுவப்பட்டு இருந்த தபால் பெட்டி கன்னியாகுமரி பழைய நிலையம் சந்திப்புக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இதற்காக அமைக்கப்பட்ட பீடத்தில் நிறுவப்பட்டது.

இந்த பணிகளை சப்கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மீண்டும் கடிதம் எழுதும் பழக்கத்தை கொண்டு வருவதற்காக மன்னர் காலத்து தபால் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தபால் பெட்டியை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே விரைவில் திறந்து வைத்ததும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

தபால்துறை கடிதம் எழுதும் பழக்கத்தை தூண்டும் விதமாக கன்னியாகுமரி முக்கிய சந்திப்பில் மன்னர் காலத்து தபால் பெட்டி அமைக்கப்பட்டது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com