கூவம் ஆற்றில் மிதக்கும் இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கூவம் ஆற்றில் மிதக்கும் இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், உடனடியாக அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூவம் ஆற்றில் மிதக்கும் இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

பூந்தமல்லி,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கூவம் ஆற்றை பொதுப்பணித்துறையினர் சீரமைத்து வருகின்றனர். இதற்காக ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. கூவம் ஆறு சீரமைப்பு திட்டத்தின் மூலம் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றி கூவத்தை விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

ஒருபுறம் தமிழக அரசு பெரும் தொகை செலவு செய்து கூவத்தை சீரமைத்து வந்தாலும், மறுபுறம் கூவம் ஆற்றின் நிலை சற்றும் மாறாமல் அப்படியே உள்ளது. குறிப்பாக தனியார் கம்பெனிகள், குடியிருப்புகள், ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் சேகரிக்கப்படும் மனித கழிவுகள் அனைத்தும் நேரடியாக கூவத்தில் கலந்து வருகிறது.

இதில் அடையாளம்பட்டு பகுதி வழியாக செல்லும் கூவத்தில் தரைப்பாலம் உள்ளது. அடையாளம்பட்டு, மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவில் இறைச்சி கடைகள் இருப்பதால் அதன் உரிமையாளர்கள் இறைச்சி கழிவுகளை மூட்டை, மூட்டையாக கூவத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.

இதனால் கூவம் ஆற்றில் ஆங்காங்கே மலைபோல் இறைச்சி கழிவு மூட்டைகள் மிதக்கின்றன. இந்த இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கூவத்தில் மூட்டை, மூட்டையாக மிதக்கும் இறைச்சி கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், அவற்றை மீண்டும் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com