

சென்னை,
குடிநீர் தட்டுப்பாடு, தற்போது தமிழகத்தில் அதிகம் பேசப்படும் வார்த்தையாகி வருகிறது. தமிழகத்தின் நீர்வளத்தை இலக்கியங்கள் சிறப்புக்கூற கேட்டு வளர்ந்த நாம், இன்றைக்கு குடிநீர் பிரச்சினையை உற்றுநோக்கி வருவது கொடுமையிலும் கொடுமை. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நாம் மிகவும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனது. தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றியது. தற்போது அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலத்தில் பெய்யும் கோடைமழையையும் காணவில்லை.
550 மில்லியன் லிட்டர் தேவை இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை மாநகரில் உள்ள 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர 24 ஆயிரத்து 712 தெருக்குழாய்கள் உள்ளன. இவற்றுக்கு தினசரி 830 மில்லியன் கன அடி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஏரிகளில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்கு தேவையான தண்ணீர் வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்து உள்ள கல்குவாரி மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் குடிநீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களான மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் இருந்து தலா 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. தண்ணீர் வராத பகுதிகளுக்கு தினசரி சுமார் 8 ஆயிரம் நடைகள் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நெம்மேலி அருகில் உள்ள பேரூரில் புதிதாக 400 மற்றும் 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் அதிகளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் சென்னையில் உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 15 இடங்களில் உள்ள 145 கிணறுகளில் உள்ள நீர்மட்டத்தை கொண்டு நிலத்தடி நீர் மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலத்தடி நீர் மட்டம் 0.55 மீட்டர் முதல் 2.88 மீட்டர் வரை உயர்ந்து காணப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து தற்போது வரை போதுமான அளவு மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது.
தற்போது பூண்டி ஏரியில் இருக்கும் 104 மில்லியன் கன அடி தண்ணீர் மூலம் 10 நாட்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதுதவிர திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் பம்பு செட்டுகளில் இருந்தும், போரூர் அருகில் உள்ள கல்குவாரி மற்றும் போரூர் ஏரிகளிலும் போதுமான தண்ணீர் உள்ளது. இதுதவிர சென்னை, கொளத்தூரில் 380 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ரெட்டேரியில் 110 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இதனை சென்னையின் மற்றொரு நீர் ஆதாரமாக மாற்றுவதற்கான ஆய்வுப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் நீர் இருப்பு, நீரின் தர பகுப்பாய்வு, மாசு அளவு, உரிய சுத்திகரிப்பு முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.