தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்பப்பெற வேண்டும்

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்பப்பெற வேண்டும்
Published on

தேனி:

நியூட்ரினோ திட்டம்

தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்துக்கு தேனி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். அவர்கள் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) சுமேஷ் சோமனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

போடி அருகே பொட்டிப்புரம் பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் இந்த திட்டம் சிதைத்து விடும் என்பதால் விவசாயிகள் தொடர்ச்சியாக இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். இந்த ஆய்வுத் திட்டத்தின் விண்ணப்பத்தை, தமிழக சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு நிபுணர்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டார்கள்.

நிராகரிக்க வேண்டும்

ஆய்வகம் அமைய உள்ள இடம், சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வருகிறது.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே ரத்து செய்து உத்தரவிட்டது.

எனவே குறுக்கு வழியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற சூழ்ச்சி நடக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ள டாடா ஆராய்ச்சி நிறுவனம், வன உயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழ்நாடு வனத்துறையிடம் விண்ணப்பித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் வளத்தை பாதுகாக்கவும், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தும் இந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு வனத்துறை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டு அரசின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் மத்திய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டு வருகிறது.

இதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கென தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப்பெற வேண்டும்.

அம்பரப்பர் மலையை சுற்றி அமைக்கப்பட்ட வேலியை அகற்றிவிட்டு, அங்கு அமைக்கப்பட்ட 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com