சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப வழங்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே திரும்ப வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு வழங்கப்பட்டது.
சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப வழங்க வேண்டும்
Published on

பெரம்பலூர்,

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, கடந்த 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் வெற்றி பெற்றார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்ற நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் அரசு விழாக்கள் ஏதுவும் நடைபெறவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்திய பிறகு தான் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனால் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களாக போட்டு சென்றனர். கடைசியாக கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி தான் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தி கொள்ளப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து 76 நாட்கள் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம் போல் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கு வதற்காக அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மனுவினை கணினியில் பதிவு செய்து விட்டு கலெக்டரிடம் வழங்கினர். கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது குறித்து கிராமபுற பொதுமக்களுக்கு சரிவர தெரியவில்லை. இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை.

சிறப்பு பொருளாதார மண்டலம்

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா டி.கீரனூர் நோவா நகரை சேர்ந்தவரும், வக்கீலுமான மானேக்ஷா பொதுமக்கள் சார்பில் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், 2007-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க போவதாக டி.கீரனூர், லப்பைக் குடிகாடு, பெண்ணகோணம், திருமாந்துறை, எறையூர், பேரையூர், மிளகாநத்தம், பெருமத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அரசு சார்பில் தனியார் நிறுவனம் ஒன்று வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும் என்பது போன்ற உறுதி மொழியை கூறி, சொற்ப விலையில் விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்களை வாங்கி கொண்டது.

ஆனால் இதுவரைக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படவில்லை. எனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப விவசாயிகளிடம் வழங்குவதற்கும், நிலங்களை கையகப்படுத்துவதற்காக போலி வாக்குறுதி கொடுத்த அந்த தனியார் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

சட்ட விரோதமாக மது விற்பனை

இதே போல் குன்னம் தாலுகா, சிறுகுடல் கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த ஒரு வருடமாக அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, பதுக்கி கூடுதல் விலைக்கு சிலர் போலீசார் உதவியுடன் விற்று வருகின்றனர். எங்கள் ஊரில் எந்நேரமும் மது பாட்டில்கள் கிடைக் கிறது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், எங்களுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். வேலைக்கு செல்லும் ஆண்கள் எந்நேரமும் மது குடித்து விட்டு, தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 118 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்று கொண்டார். மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்த கலெக்டர் குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com