

வையம்பட்டி,
ஊரடங்கால் ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர்களின் வாழ்க்கை இருண்டு போனது.
ஒலி, ஒளி அமைப்பாளர்கள்
இறப்பு வீடு தொடங்கி, திருவிழாக்கள் வரை அனைத்திலும் ஒளி மற்றும் ஒலி அமைப்பாளர்களின் பணி இன்றியமையாதது. இதுமட்டுமின்றி பல்வேறு சுப நிகழ்ச்சிகளும் ஒலி, ஒளியால் சிறப்பு பெறும். ஆண்டில் திருவிழா மற்றும் சுப முகூர்த்தம் உள்ளிட்ட 6 மாதங்களில் ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு பணி அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
திருமணம் உள்ளிட்ட எவ்வித சுப நிகழ்ச்சிகள் ஆனாலும், திருவிழாக்கள் ஆனாலும் இரவை பகலாக்கும் வகையில் வண்ண, வண்ண ஒளி விளக்குகள் மின்னிக் கொண்டே இருக்கும், விதவித பாடல்கள் செவிக்கு விருந்தளிக்கும். எந்த நிகழ்ச்சிக்கு எப்படி ஒலி, ஒளி அமைக்க வேண்டும் என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பணி செய்வார்கள்.
கோவில் திருவிழாக்கள்
இதுமட்டுமின்றி தற்போதுள்ள சித்திரை, வைகாசி உள்ளிட்ட மாதங்களில் கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் அதிக அளவில் நடக்கும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தொடர்ந்து 3 முறை நீடித்து வரும் ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கி என்ன செய்வதென்று தெரியாமல் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
இறப்பு என்றாலும் அங்கு எவ்வித சப்தமும் இருக்க கூடாது, 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். திருமண நிகழ்ச்சிக்கும் அதே நிலை தான். 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை. காதணி விழா உள்ளிட்ட எந்தவித சுபநிகழ்ச்சிகளானாலும் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சிறிய அளவில் நிகழ்ச்சி முடிந்து விடுகின்றது. இதே போல் வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் மூடப்பட்டு இருப்பதால் எந்தவித திருவிழாக்களும் நடைபெற வில்லை.
வட்டியில்லா கடன்
இப்படி அடுக்கடுக்கான காரணங்களால் லட்சக்கணக்கில் கடன் பெற்று பல்வேறு நவீன தொழில் நுட்பத்தில் ஒளி, ஒலி அமைப்பதற்கான பொருட்களை வாங்கி வைத்து அவற்றிற்கு வட்டி கூட கட்ட முடியாமல் சாப்பாட்டிற்கு கூட திண்டாட வேண்டிய நிலைக்கு அந்த தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகவே ஒலி, ஒளி அமைப் பாளர்களின் வாழ்வாதாரத்தை பேணி பாதுகாத்திட அரசு உரிய முயற்சிகள் மேற்கொண்டு போதுமான நிவாரண உதவி வழங்கிடுவதோடு வட்டியில்லா கடன் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதுடன் ஏற்கனவே பெற்ற கடனுக்கான வட்டியையும் ரத்து செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.