ஆயுள் காப்பீட்டு கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

ஆயுள் காப்பீட்டு கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என தென்மத்திய மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணை செயலாளர் சுரேஷ் கூறினார்.
ஆயுள் காப்பீட்டு கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
Published on

திருவாரூர்,

திருவாரூரில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க தஞ்சை கோட்ட 56-வது ஆண்டு மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு சங்க கோட்ட தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநில துணை பொதுச்செயலாளர் கருமலையான், தென்மண்டல துணைத்தலைவர் சுவாமிநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், எல்.ஐ.சி. முகவர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா, எல்.ஐ.சி அலுவலர் சங்க பொதுச்செயலாளர் பெலிக்ஸ் அமலநாதன், திருவாரூர் கிளை தலைவர் தெட்சிணாமூர்த்தி உள்பட கலந்து கொண்டனர்.

அப்போது தென்மத்திய மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணை செயலாளர் சுரேஷ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வைரம் வாங்குபவர்களுக்கு வரி விதிக்காமல், மக்கள் சேமிப்பிற்காக இன்சூரன்ஸ் எடுப்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தவறானது. இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு கழகத்தை தனியார் மயமாக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நாட்டுக்கு பல வகையிலும் சேவை செய்யும் பொதுத் துறை நிறுவனமாக எல்.ஐ.சி. விளங்கி வருகிறது.

ஐ.டி.பி.எல். வங்கியை எல்.ஐ.சி.யோடு இணைப்பதால் எல்.ஐ.சிக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டம், 14-ந் தேதி சி.ஐ.டி.யூ. நடத்தும் தர்ணா மற்றும் செப்டம்பர் 5-ந் தேதி நாடாளுமன்றம் நோக்கி தொழிலாளர் வர்க்கம் நடத்தும் பேரணிக்கு தார்மீக ஆதரவளிப்போம். விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் விரோத பா.ஜனதா அரசை வரும் தேர்தலில் தோற்கடிப்பதற்கான பிரசாரத்தை காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தினர் மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக புலவர் சண்முகவடிவேல் வரவேற்றார். முடிவில் சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com