

கூடலூர்,
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 21-வது வார்டு பகுதியாக லோயர்கேம்ப் உள்ளது. அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் குமுளி அமைந்துள்ளது. லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி செல்வதற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் நிறைந்த இந்த மலைப்பாதையில் வாகனங்களில் பயணிப்பவர்கள் மான்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகளை பார்த்து ரசித்தபடியே செல்லலாம்.
மேலும் கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாக மூணாறு, தேக்கடி விளங்குகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் இந்த சுற்றுலா தலங்களை பார்த்து ரசிப்பதற்காக வருகை தருவார்கள். அவர்கள் அனைவரும் குமுளி மலைப்பாதை வழியாகவே சுற்றுலா இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையோரத்தில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை பார்த்து ரசிக்கின்றனர். பின்னர் அங்கே அமர்ந்து, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொண்டுவரப்பட்ட உணவு பொருட்களை சாப்பிடுகின்றனர். பின்னர் அந்த டப்பாக்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். மேலும் தண்ணீர் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் மலைப்பாதையோரத்தில் வீசிச்செல்கின்றனர். இவற்றை, இரை தேடி அப்பகுதிக்கு வரும் வனவிலங்குகள் உணவு பொருட்கள் என நினைத்து சாப்பிட்டு விடுகின்றன.
இதன் காரணமாக அவை உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. இதேபோல் மலைப்பாதையோரத்தில் அமர்ந்து சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து போட்டுச்செல்கின்றனர். அவற்றை வனவிலங்குகள் கவனிக்காமல் கடந்து செல்ல முயலும் போது கண்ணாடி துண்டுகள் அவற்றின் உடலில் காயங்களை ஏற்படுத்துகின்றன. எனவே லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வீசிச்செல்வதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.