

ஒற்றை யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான மான், யானைகள், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன.
அவ்வாறு வரும் யானைகள் வனப்பகுதியில் உள்ள திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
துரத்தியது
அதேபோல் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் அருகே நடுரோட்டில் வந்து நின்றது. யானையை பார்த்ததும் அந்த வழியாக வந்த கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தங்கள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். ஒரு சிலர் யானையை கடந்து மறுபுறம் செல்ல முயன்றனர். அப்போது ஆவேசமடைந்த யானை வாகன ஓட்டிகளை துரத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே காணப்பட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு யானை தானாகவே காட்டுக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன. இதனால் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் வனப்பகுதி சாலையில் அடிக்கடி சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.