

கரூர்,
நாடு முழுவதும் வருகிற 1-ந்தேதி முதல் சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்பட உள்ளது. இதில் கைத்தறி ஜவுளி தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டதை போல விசைத்தறி ஜவுளி தொழிலுக்கும் விலக்கு அளிக்க கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முன்தினம் முதல் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கரூரில் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரூ.5 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டது.
2-வது நாளாக ...
இந்த நிலையில் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் 400 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிற் கூடங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தினால் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இன்றும் (வியாழக்கிழமை) உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. கோரிக்கைளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து உற்பத்தியை நிறுத்தவும், கொள்முதல் செய்யாமலும், சரக்குகளை அனுப்பாமலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ரூ.50 கோடி ஜவுளிகள் தேக்கம்
இதற்கிடையே வருகிற 1-ந்தேதி முதல் சரக்கு, சேவை வரி அமலில் வருவதால் வெளி மாநிலங்களுக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து ஜவுளிகளை அனுப்பாமல் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர். இதில் ரூ.50 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்திருப்பதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே உற்பத்தியை நிறுத்தியதால் நேற்று முன்தினமும், நேற்றும் சேர்த்து ரூ.10 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.