நல்லூர் அருகே பின்னோக்கி வந்த லாரி அரசு பஸ் மீது மோதல்

நல்லூர் அருகே பின்னோக்கி வந்த லாரி அரசு பஸ் மீது மோதியதில் 6 பயணிகள் காயம் அடைந்தனர்.
நல்லூர் அருகே பின்னோக்கி வந்த லாரி அரசு பஸ் மீது மோதல்
Published on

நல்லூர்,

திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் அப்துல்ரகுமான் என்பவர் ஓட்டிச்சென்றார். காலை 11 மணி அளவில் திருப்பூர் நல்லூர் அருகே காங்கேயம் சாலை நல்லிகவுண்டன் நகர் பகுதியில் வந்த போது, ஒரு லாரி சாலையின் குறுக்கே பின்னோக்கி வந்து கொண்டிருந்தது.

இதை பார்த்த பஸ் டிரைவர், பஸ்சை உடனடியாக நிறுத்தினார். அதே நேரம் பஸ்சை கவனித்த லாரி டிரைவரும் லாரியை உடனடியாக நிறுத்தி பஸ்சுக்கு வழிவிட்டுள்ளார். இதைதொடர்ந்து பஸ்சை டிரைவர் நகர்த்தி லாரியை கடந்து செல்ல முயன்றார். அப்போது பஸ் சென்றுவிட்டதாக நினைத்து, டிரைவர் லாரியை பின்னோக்கி நகர்த்திய போது பஸ்சின் வலது புறம் பின்பக்க பக்கவாட்டில் லாரி மோதியது. இதில் பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து சிதறியதுடன், பஸ்சின் பின்பக்கம் சேதமடைந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த ஒரத்தநாடு தாலுகா வெட்டிக்காடு பகுதியை சேர்ந்த தர்மராஜ்(48), கும்பகோணத்தை சேர்ந்த சுரேஷ்(34), பழனிசாமி(45), கரூரை சேர்ந்த முருகன்(37), தஞ்சாவூரை சேர்ந்த முத்துமணி(43), மாரிமுத்து(30) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com