லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: 6 நாட்களாக நின்ற சரக்கு ரெயில் சென்னை சென்றது

லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியாலும், சிமெண்டு மூட்டைகளை வைக்க இடவசதி இல்லாததாலும் காட்பாடி ரெயில் நிலையத்தில் கடந்த 6 நாட்களாக சிமெண்டு மூட்டைகளுடன் நின்ற சரக்கு ரெயில் சென்னை தாம்பரத்துக்கு சென்றது
லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: 6 நாட்களாக நின்ற சரக்கு ரெயில் சென்னை சென்றது
Published on

காட்பாடி,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 20-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லாரிகள் ஓடவில்லை.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஜிட்டூர் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சிமெண்டு மூட்டைகள் ஏற்றிய சரக்கு ரெயில் ஒன்று 20-ந்தேதி பகல் 11.30 மணியளவில் வந்தது. 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் 41 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 66 டன் வீதம் மொத்தம் 2,706 டன் சிமெண்டு மூட்டைகள் இருந்தன.

காட்பாடி கூட்ஸ் ஷெட் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் கடந்த 6 நாட்களாக சரக்கு ரெயிலில் வந்த சிமெண்டு மூட்டைகளை இறக்கி மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படவில்லை. அதனால் சரக்கு ரெயிலில் வந்த 2,706 டன் சிமெண்டு மூட்டைகள் தேக்கம் அடைந்தன.

சரக்கு ரெயிலில் வந்த பொருட்கள் 9 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த ரெயில்வே நிர்வாகம் அவகாசம் அளிக்கிறது. அதற்குமேல் ரெயிலில் இருந்தால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு பெட்டிக்கு ரூ.150 வீதம் வாடகை செலுத்த வேண்டும்.

கடந்த 6 நாட்களாக சிமெண்டு மூட்டைகள் இறக்கப்படாததால் வாடகை கட்டணமாக ஒரு நாளைக்கு 1 லட்சத்து 47 ஆயிரத்து 600 ரூபாய் சிமெண்டு மூட்டைகளை எடுத்துச் செல்லும் ஏஜென்டுகள் செலுத்த வேண்டும். நாளுக்கு நாள் ரெயில்வே நிர்வாகத்துக்கு செலுத்தும் வாடகை கட்டணம் அதிகமாகி கொண்டே வந்தது.

காட்பாடி கூட்ஸ் ரெயில் நிலையத்தில் 2,706 டன் சிமெண்டு மூட்டைகளை இறக்கி வைப்பதற்கான இடவசதி இல்லை. எனவே மூட்டைகள் எடுத்துச் செல்லும் ஏஜென்டுகள் சென்னை தாம்பரத்துக்கு சரக்கு ரெயிலை அனுப்பும் படி ரெயில்வே நிர்வாகத்துக்கு தெரிவித்து, பதிவு செய்தனர்.

இதையடுத்து லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியாலும், சிமெண்டு மூட்டைகளை வைக்க இடவசதி இல்லாததாலும் 6 நாட்களாக காட்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் சிமெண்டு மூட்டைகளுடன் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com