கடலில் மாயமான மீனவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு நிவாரணம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

கடலில் மாயமான மீனவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு நிவாரணம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
கடலில் மாயமான மீனவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு நிவாரணம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
Published on

கடலூர்,

கடலூர் சிப்காட்டில் டான்பாக் நிர்வாக பணியாளர்கள் வாழ்வுரிமை சங்க கொடியேற்று விழா மற்றும் வாயிற்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து பேசினார்.

விழாவில் டான்பாக் சங்க கவுரவ தலைவர் செந்தில், தலைவர் கார்த்திக், செயலாளர் செந்தில்ராஜ், பொருளாளர் பிரபாகரன், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, முடிவண்ணன், கடலூர் தொகுதி செயலாளர் ஆனந்த், நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன், நகர செயலாளர் கமலநாதன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒகி புயல் பாதிப்பை ஒரு மாதத்துக்கு பிறகு மத்தியக்குழு வந்து பார்வையிடுவது கண்டிக்கத்தக்கது. ஒகி புயலில் இதுவரை 400-க்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதைத்தான் மீனவர்களும் கூறி வந்தனர். எனவே காணாமல் போன மீனவர்களை மீட்டுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணாமல் போன மீனவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு நிவாரணம் வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்து விட்டு, காணாமல் போன அனைத்து மீனவர்களுக்கும், அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் உடனே வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதி உதவி போதாது, எனவே உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். அதேப்போல் புயலால் சேதமடைந்த படகுகளை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆண்டது போதும்

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில் முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி கேட்கிறீர்கள், தமிழ்நாட்டை ஆள ரஜினி வந்து இருக்கிறார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அவரை விட தலைமை பண்புள்ளவர்கள், நிர்வாக திறமை உள்ளவர்களெல்லாம் நிறைய பேர் உள்ளனர்.

தமிழ்நாட்டை சினிமாத்துறையில் உள்ளவர்கள் ஆண்டது போதும். தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு ரஜினி ஏதாவது குரல் கொடுத்து இருக்கிறாரா? தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு அவர் குரல் கொடுத்து விட்டு அரசியலுக்கு வரட்டும்.

இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com