

கே.கே.நகர்,
திருச்சி மாநகர போலீசார் நேற்று அதிகாலை கே.கே.நகர் சுந்தர் நகர் பகுதியில் வாகனத்தில் சைரன் ஒலித்தப்படியே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சபரி மில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பர்னிச்சர் கடையின் முன்பு சந்தேகப்படும்படியாக ஒரு வேன் நின்று கொண்டிருந்ததை கண்ட போலீசார், அதனை சோதனை செய்ய சென்றனர். அப்போது அந்த வேனில் இருந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டவுடன், அதில் இருந்து இறங்கி தப்பியோடி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் விரட்டி சென்று மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்கள் தப்பி சென்றனர்.
இதையடுத்து போலீசார் அந்த பர்னிச்சர் கடைக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பர்னிச்சர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து பர்னிச்சர் கடையின் உரிமையாளரான கே.கே.நகர் ரெங்கநகர் பகுதியை சேர்ந்த பாஷாவுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த அவர் கடையை திறந்து உள்ளே சென்று பார்வையிட்டார். ஆனால் கடையின் பூட்டு மட்டும் தான் உடைக்கப்பட்டுள்ளது, பொருட்கள் ஏதும் திருடு போகவில்லை என்று பாஷா போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து போலீசார் வேனின் கதவை திறந்து சோதனை செய்தபோது, அதில் பனியன், உள்ளாடை மற்றும் துணிகள் இருந்தது. அந்த ஆடைகள் உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான சுந்தர் நகரில் உள்ள ஜவுளிக்கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட ஆடைகளின் மதிப்பு பல ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று செந்தில்குமார் தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்து வந்த கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர் நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்த வேனின் ஒட்டப்பட்டிருந்த பதிவெண் போலி பதிவெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.