குமரி மாவட்டத்தில் வாக்காளர்களை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுபான்மையினர் கூட்டமைப்பு கோரிக்கை

குமரி மாவட்டத்தில் வாக்காளர்களை நீக்கம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுபான்மையினர் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குமரி மாவட்டத்தில் வாக்காளர்களை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுபான்மையினர் கூட்டமைப்பு கோரிக்கை
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் ஞானதாசன் தலைமையில் ஏராளமானோர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 35 ஆயிரத்து 377 வாக்காளர்களுக்கு பதிலாக வாக்காளர் பெயர் சேர்ப்பு என்ற பெயரில் புதிய 35 ஆயிரம் இளம் வாக்காளர்கள் சேர்த்து கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் வாக்காளர்களின் எண்ணிக்கை உயராமல் அப்படியே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிக்குள் ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1400 வாக்காளர்கள் வரையிலும், கிராமப் பகுதியில் 1200 வாக்காளர்களும் இருக்க வேண்டும்.

இதற்கு அதிகமான வாக்காளர்களை சேர்க்கும் போது புதிய வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைத்திருக்க வேண்டும். இதற்காக வாக்குச்சாவடிக்கான இடம் தேர்வு, வரைபடம் தயாரிப்பு, நிர்வாக ரீதியான எண்கள் ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் திருத்தி தயாரிப்பு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது இருக்கும்.

இதற்கு கூடுதல் மின்னணு ஓட்டு எந்திரங்கள், அதற்கேற்ப இட வசதிகளை ஏற்படுத்துதல் என்று பல்வேறு பணிகள் இருக்கும். இந்த பணிகளை தவிர்க்க வேண்டும் என்று வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க விடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி உள்ளனர். இதன் காரணமாக பல ஆயிரம் சிறுபான்மையின வாக்காளர்கள் நீக்கப்பட்டு புதிய இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

பல ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனு கொடுத்தபோது கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மீரான் மைதீன், பொருளாளர் மரியராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com