விதான சவுதாவில் எம்.எல்.சி.க்கள் தர்ணா

கிராம பஞ்சாயத்துகளை பலப்படுத்த கோரி விதான சவுதாவில் எம்.எல்.சி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
விதான சவுதாவில் எம்.எல்.சி.க்கள் தர்ணா
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 எம்.எல்.சி.க்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராம பஞ்சாயத்துகளை பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கர்நாடக கிராம சுவராஜ்ஜிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.சி.க்கள் ராமச்சந்திரகவுடா, கோடா சீனிவாச பூஜாரி, பிரதாப் சந்திரசெட்டி, மகந்தேஸ் கவடகிமட, விவேகாராவ் பட்டீல், அமர்நாத் பட்டீல், ஸ்ரீகண்டேகவுடா, பிரனேஷ், சவுடாரெட்டி, காந்தராஜூ, ரகுநாத் மல்காபுரே உள்பட 14 பேர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கர்நாடக கிராம சுவராஜ்ஜிய பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளை பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி கிராம பஞ்சாயத்து தலைவருக்கு உரிய அதிகாரம் இன்னும் வழங்கவில்லை. தலைவரிடம் அதிகாரிகள் பணிகள் குறித்து எந்த அறிக்கையும் வழங்குவது இல்லை.

அதனால் கேரளாவை போல் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும். பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் தலைவரின் உத்தரவுப்படி பணியாற்ற அனுமதிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்துகள் பலம் பெறாவிட்டால் திட்டங்களை செயல்படுத்த முடியாது. எனவே அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக 33 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அரசிடம் கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com