ஜெயங்கொண்டம் நகராட்சியில் கிடப்பில் போடப்பட்ட நவீன உரக்கிடங்கு கட்டும் பணி

ஜெயங்கொண்டம் நகராட்சியில் நவீன உரக்கிடங்கு கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் கிடப்பில் போடப்பட்ட நவீன உரக்கிடங்கு கட்டும் பணி
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு கட்டுப்பட்ட செங்குந்தபுரம், சின்னவளையம், வேலாயுதம்நகர், கரடிகுளம், கீழக்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 21 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி துப்புரவு பணியாளர்களுக்கு தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டு வீடு மற்றும் வீதிகள் தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொம்மேடு பகுதி சாலையோரம் உள்ள அரசு நிலத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதுவே மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது.

இதற்கிடையே தற்போது நகராட்சியால் கட்டப்பட்ட சின்னவளையம் சமுதாயக்கூடத்திற்கு அருகே உரக்கிடங்கில் குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக வேண்டுவோருக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வந்தது. மேலும் மக்காத குப்பைகளை அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு எரியூட்டுவதற்காக லாரிகளில் அனுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக செங்குந்தபுரம் அருகே உள்ள புதுக்குடி ஊராட்சியில் ரூ.7 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சார்பில் நவீன கலவை உரக்கிடங்கு அமைப்பதற்காக கல்லுக்குழி என்ற இடத்தில் பணி தொடங்கப்பட்டது. சுமார் 15 அடி உயரத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு அடித்தளம் அமைத்து, அதன் மேலே பெரிய, பெரிய தூண்கள் அமைக்கப்பட்டது.

6 மாதத்தில் முடிக்க வேண்டிய பணிகள் என்ன காரணத்தினாலோ திட்டம் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு புதுக்குடி ஊராட்சியில் பலமுறை பொதுமக்கள் சிலர் இந்த இடத்தில் திட்டம் தொடங்கக்கூடாது என போராட்டம் நடத்தி வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு வெற்றி பெற்று நகராட்சிக்கு சாதகமானது.

இந்த நிலையில் பொதுமக்கள் எதிர்பை மீறி தொடங்கப்பட்ட திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக சுமார் ரூ.5 கோடி மதிப்பில் பெரிய அளவில் பல்வேறு எந்திரங்கள் வாங்கப்பட்டது. அந்த எந்திரங்களும் தற்போது உபயோகமில்லாமல் வாரச்சந்தைக்கு பின்புறம் உபயோகமற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுடைய வரிப்பணம் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தளவாட பொருட்கள் மழை, வெயிலில் கிடந்து வீணாகி போகும் முன் நவீன உரக்கிடங்கு திட்டத்தை முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com