டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று நெய்வேலியில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும்
Published on

நெய்வேலி,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. இதற்கு கட்சியின் நிறுவன தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பெரும்பான்மையை நிரூபிக்க...

தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் அரசியல் கட்சி எது?, அந்த கட்சியின் பெயர் இன்னதென்று இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் குற்றச்செயல் என்பதோடு வெளிப்படைத்தன்மையற்ற ஜனநாயக விரோத செயலுமாகும். எனவே தமிழ்நாட்டை ஆளும் அரசியல் கட்சி எது, அதற்கு என்ன பெயர் என்பதை தமிழக கவர்னர் தெளிவுபடுத்த வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்.

தற்போது டெங்குகாய்ச் சலின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கியுள்ளது. ஏறத்தாழ 25 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 200 பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. ஆனால் தமிழக அரசோ 40 பேர்தான் பலியாகி உள்ளதாக கூறுவதை வன்மையாக கண்டிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். டெங்கு பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு மற்றும் சுற்றுப்புற சுகாதார பணிகளை முடுக்கிவிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

சி.பி.ஐ.விசாரணை

கையூட்டு பெற்றுக்கொண்டு தடை செய்யப்பட்ட குட்காவை விற்க அனுமதித்த விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெறாததையும், அந்த பெயர்கள் இடம்பெற்றிருந்த ஆவணம் காணாமல் போனதையும் வன்மையாக கண்டிப்பது,

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது டாஸ்மாக், மின்வாரியம், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.800 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொண்டதாக தமிழக அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. மக்கள் நலப்பணிகளுக்கே பணமில்லாமல் திண்டாடும்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அரசு பணத்தில் கொண்டாடுவதை செயற்குழு வன்மையாக கண்டிப்பது,

என்.எல்.சி. தொழிலாளர்களை நிரந்தரம்...

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் தலைமை நிலைய செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com