நகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னையை அடுத்த தாம்பரம் பஸ் நிலையத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
Published on

தாம்பரம்,

தென் தமிழகம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் நுழைவு வாயிலாக தாம்பரம் உள்ளது. ரெயில்களிலும், பஸ்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் தாம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிலையம் தாம்பரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ளது.

அந்த அலுவலகம் வழியாக பஸ் நிலையத்திற்கு செல்லும் முத்துரங்கம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. நகராட்சி அலுவலகம் எதிரிலேயே சாலையை ஆக்கிரமித்து கடைகள் நிறைந்து இருப்பதால் தாம்பரம் மார்க்கெட், பஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களும் செல்ல முடியாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பஸ் நிலையம் பகுதியில், நகராட்சி கட்டண கழிப்பிடம் உள்ளது. அங்கு செல்பவர்களும், மாநகர பஸ்களில் பயணம் செய்ய மாதாந்திர பஸ் பாஸ்கள் வாங்க வரும் பயணிகளும், முதியோர் பஸ் பாஸ் வாங்க வருபவர்களும் முத்துரங்கம் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சாலையை கடைகள் ஆக்கிரமித்துள்ளன.

பஸ் நிலையத்தின் ஒரு பகுதி வாகன நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், தாம்பரத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஜி.எஸ்.டி. சாலையில் அகற்றப்பட்ட கடைகள் வாகன நிறுத்தும் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கலாமா? என பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் கேட்டால், ஒரு கும்பல் தங்களை மிரட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பஸ் நிலைய பகுதியில் நகராட்சி கட்டண கழிப்பிடம் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு அந்த பகுதி முழுவதுமே பூக்கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது.

தாம்பரம் பஸ் நிலையத்தின் உள்ளே ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்கவில்லை என பல மாதங்களாக தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் காலம் கடத்தி வந்தனர். பின்னர், சில மாதங்களுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டண கழிப்பிடம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றிய மறுநாளே ஏற்கனவே இருந்ததைவிட கூடுதலாக பல கடைகள் அங்கு முளைத்தன. கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டோம் என நகராட்சி அதிகாரிகளும் கோர்ட்டில் தெரிவித்துவிட்டனர். ஆனால், ஏற்கனவே இருந்த கடைகளைவிட அதிக கடைகள் முளைத்து இருப்பதை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் வேடிக்கைப்பார்க்கின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நகரத்தில் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு நடந்துகூட செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இருப்பது நகரத்துக்கு நல்லதல்ல. கோர்ட்டு உத்தரவிட்டும் அதை நிறைவேற்ற முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காணமாட்டார்களா? என்பது தாம்பரம் பகுதி மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. நடைபாதைகளை ஆக்கிரமித்து, கடைகளை வாடகைக்கு விடுவதாகவும், எத்தனை முறை அகற்றினாலும் மீண்டும் மறுநாளே கடைகளை திறப்பதாகவும் பொதுமக்கள் சிலர் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக தாம்பரம் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பஸ் நிலைய பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மறுநாளே கடைகள் போடுகிறார்கள் என்பது உண்மை தான். கடைகள் வைத்துதான் நாங்கள் பிழைப்பு நடத்துகிறோம். இங்கு கடைகள் அமைக்கக்கூடாது என எங்களை துரத்தினால் நாங்கள் எப்படி பிழைப்பது? என கூறி மீண்டும் கடைகள் அமைக்கின்றனர். பஸ் நிலைய பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டுவதற்கு அரசு அனுமதி கிடைத்துள்ளது. இந்த பணிகள் நடைபெறும்போது இங்குள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் நிச்சயம் அகற்றப்படும் என்றனர்.

மல்டி லெவல் பார்க்கிங் வருவது தாம்பரம் பகுதி மக்களுக்கு நல்ல விஷயம் தான். ஆனால் அதுவரை மக்கள் தினமும் சென்றுவரும் பஸ் நிலையத்திற்கு நடந்துகூட செல்ல முடியவில்லையே? இது என்ன நியாயம் என பொதுமக்கள் கேட்கின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் நிலையத்தை சீர்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்வாயை ஆக்கிரமித்ததால் தான் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அதில் கற்றுக்கொண்ட பாடத்தால் தான் தற்போது கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதேபோல், நகரின் பல இடங்களில் சாலைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளையும் அகற்றிவிட்டால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு...

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com