

காட்பாடி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிக்கொண்டு வரப்படும் என காட்பாடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தேர்தல் பிரசாரம்
காட்பாடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரைமுருகனை ஆதரித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காட்பாடி பள்ளிக்குப்பம், அருப்புமேடு ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என கூறியுள்ளோம். அதன் பின்னரே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மிஷின் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் பலமுறை சம்மன் அனுப்பியும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை.
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிக்கொண்டு வரப்படும்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களை சுட்டுக் கொன்ற ஆட்சி. பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் வன் கொடுமை, பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாலியல் கொடுமை செய்ததாக ராஜேஷ்தாஸ் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்
அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானால் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை குத்துங்கள். அது எடப்பாடி பழனிசாமிக்கும், மோடிக்கும் நீங்கள் அளிக்கும் குத்து ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி., உள்பட பலர் கலந்து கொண்டனர்.