நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகூர் தர்கா கந்தூரி விழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான 462-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி முன்னதாக நாகையில் இருந்து கொடி ஊர்வலம் நடந்தது. அப்போது சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடி அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் வைத்து நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது.

பின்னர் பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, கப்பல் ஆகிய 5 கொடிகள் எடுத்து செல்லப்பட்டன. இதையடுத்து மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணிசட்டி, பிறை, படகு போன்ற அலங்கார வடிவங்கள் கொடி ஊர்வலத்தில் அணிவகுத்து சென்றன.

நாகை புதுப்பள்ளிதெரு வழியாக நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, நீலா கீழவீதி, தெற்கு, வடக்கு வீதி, தேரடி தெரு, புதுத்தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு உள்ளிட்ட 40 தெருக்களில் கொடி ஊர்வலம் நடந்தது. பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை ரதங்கள் சென்றடைந்தன.

கொடிகள் வைக்கப்பட்டிருந்த ரதங்கள் நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்தபோது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று கொடி ஊர்வலத்தில் வந்த அலங்கார பல்லக்குகள் மற்றும் ரதங்களை கண்டு மகிழ்ந்தனர். குட்டிக்கப்பல் போன்ற ரதங்களை சிறுவர்கள் உற்சாகமாக இழுத்து சென்றனர். கொடி ஊர்வலத்தின்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரளாக கூடி நின்று பெரிய ரதத்தின் மீது பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர்.

பக்தர்களுக்கு அலங்கார ரதங்களில் இருந்து எலுமிச்சை பழம், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. கொடி ஊர்வலம் நாகூர் எல்லையில் இருந்து நாகூர் செய்யது பள்ளி தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரெயிலடி தெரு உள்ளிட்ட 14 தெருக்களின் வழியாக சென்று தர்காவின் அலங்கார வாசலை சென்றடைந்தது. பின்னர் தர்காவில் துவா ஓதப்பட்டு விழா கொடிகள் தர்கா ஊழியர்களால் மினராக்களின் உச்சிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு பாத்திகா ஓதியதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்த 5 மினராக்களிலும் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. கொடியேற்றத்தை தர்காவை சுற்றி குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து பிரார்த்தனை செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாபூத்து என்னும் இந்த சந்தனக்கூடு புறப்பட்டு 16-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். முன்னதாக தர்காவில் வாணவேடிக்கை, பீர்வைக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com