புதிய 4 வழிச்சாலை திட்டம்: பாலக்கோட்டில் கருத்துக்கேட்பு கூட்டம்

புதிய 4 வழிச்சாலை திட்டம் தொடர்பாக பாலக்கோட்டில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.
புதிய 4 வழிச்சாலை திட்டம்: பாலக்கோட்டில் கருத்துக்கேட்பு கூட்டம்
Published on

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வரை 76 கி.மீ. நீளம் தேசிய நெடுஞ்சாலை-844 என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மதீப்பீட்டில் புதிய 4 வழிச்சாலை அமைக்க ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் செயல்பட தொடங்கி உள்ளது. இதில் பாலக்கோடு பகுதியில் 41 கி.மீ. தூரம் பயன்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக சாலைக்கு தேவையான நிலத்தை அளவிடும் பணி மேற்கொள்ளப்பட்டது அப்போது ஏராளமான விவசாயிகள் நிலத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மீறி அளவிட்டால் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து நில உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறிய நேற்று பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. பாலக்கோடு தாலுகாவைச் சேர்ந்த 15 கிராம மக்களும், தர்மபுரி தாலுகாவைச் சேர்ந்த 4 கிராம மக்களும் சுமார் 700-க்கும், மேற்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

தற்போது உள்ள ஓசூர்-அதியமான்கோட்டை சாலையை விரிவுபடுத்தினாலே போதுமானது. அதை விடுத்து புதிய பகுதியில் சாலை அமைப்பதால் விவசாயம் அழிந்துபோகும். மேலும் எங்களுடைய வாழ்வாதாரமான நிலத்தை இழந்து நாங்கள் எங்கு செல்வோம்? மேலும் நிலத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடுகள், கிணறுகள், கடைகள் போன்றவற்றை இழக்க நேரிடுகிறது. எனவே எங்கள் நிலங்களை எடுப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். இதில் ஏராளமான பெண்கள் நாங்கள் வீட்டை இழக்க நேரிடுகிறது என அழுதனர்.

உதவி கலெக்டர் ராமமூர்த்தி கூறியதாவது:-

உங்களின் கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். நிலத்தை தருபவர்களுக்கு அதற்கு உரிய அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். நிலத்தில் உள்ள கிணறு, வீடு, கட்டிடம் போன்றவற்றிற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும், என்றார்.

இம்முகாமில் பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஸ்வரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் நாராயணன், திட்ட அலுவலர்கள், வேளாண்மைத்துறை, பொதுப்பணித் துறை பொறியாளர்கள், தோட்டக்கலைத் துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com