வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க புதிய மோப்ப நாய் ‘டயானா’

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினரின் உதவிக்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க புதிய மோப்ப நாய் டயானா வாங்கப்பட்டு உள்ளது.
வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க புதிய மோப்ப நாய் ‘டயானா’
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் போலீசாருக்கு குற்றச்செயல்களில் துப்பறியவும், தடயங்களை வைத்து மோப்ப சக்தி மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், தடைசெய்யப்பட்ட பொருட்களையும், ஆபத்தை விளைவிக்கும் பொருட்களையும் கண்டுபிடிக்கும் வகையில் துப்பறியும் மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ராமநாதபுரம் காவல்துறையில் குற்ற செயல்களில் துப்பறிவதற்காக ஜூலி, ரோமியோ, லைக்கா என்ற நாய்களும், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் திறன், மோப்ப சக்தி கொண்ட ராம்போ, ஜான்சி என்ற நாய்களும் பணியாற்றி வந்தன. இதில் லைக்கா வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்று விட்டது. வெடிகுண்டுகளை கண்டுபிடித்து கொடுக்கும் ஜான்சி நாய் கடந்த மே மாதம் ஓய்வு பெற்று தொடர் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் கடந்த 11ந்தேதி இறந்துவிட்டது.

இதன்காரணமாக வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் திறன் உடைய மோப்ப சக்தி கொண்ட நாய் தேவை ஏற்பட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து லேபரடார் வகை பெண் நாய் புதிதாக வாங்கி வரப்பட்டுள்ளது. டயானா என்ற பெயர் கொண்ட இந்த புதிய மோப்ப நாய்க்கு ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நாய்கள் பராமரிக்கும் பிரிவில் பயிற்சியாளர்கள் அடிப்படை பயிற்சி அளித்து வருகின்றனர்.

3 மாத காலம் இந்த பயிற்சி முடிவடைந்ததும் கோவையில் 6 மாத காலம் பணித்திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெடிகுண்டுகளை கண்டுபிடித்து தெரிவிக்கும் வகையில் மோப்ப சக்தி மிக்கதாக உருவாக்க இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆண் நாய்களை விட பெண் நாய்கள் அதிக மோப்ப சக்தியுடனும், பணியில் உன்னிப்பாகவும், கவனம் சிதறாமல் ஈடுபடுவதால் பெரும்பாலும் பெண் நாய்கள் இந்த மோப்பசக்தி துப்பறியும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக பயிற்சியாளர் தெரிவித்தார்.

மேலும், ராமநாதபுரத்தில் குற்றச்செயல்களில் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வரும் ரோமியோ மோப்ப நாய் மாநில அளவிலான பணித்திறன் போட்டியில் 2ம் இடம் பிடித்துள்ளதோடு, இந்திய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவையில் அளிக்கப்படும் பயிற்சியின் முடிவில் டயானா ராமநாதபுரம் மாவட்டத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து தெரிவிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. காவல்துறையில் துப்பறியும் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் படிகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இதுதவிர, பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால் உடல்கூறு பரிசோதனை நடத்தப்பட்டு போலீஸ் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com