கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது - 4 பேர் பலி

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. மேலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 4 பேர் பலியானார்கள்.
கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது - 4 பேர் பலி
Published on

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,227-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 4,546 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,580 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரி நர்சிங் கண்காணிப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர் கடந்த 2 நாட்களாக விடுமுறையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்தவருக்கு காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் காளிதாஸ் தெரிவித்தார்.

மேலும், கோவை வைசியாள் வீதியை சேர்ந்த 5 வயது குழந்தை உள்பட 4 பேர், மாதம்பட்டி செல்லப்பகவுண்டன்புதூரை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர், எஸ்.எஸ்.குளம் போலீஸ் குடியிருப்பு சேர்ந்த 5 வயது பெண் குழந்தை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 28 பேர், லட்சுமிபுரம் சின்னசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த 3 பேர், சின்னவேடம்பட்டி முருகன் நகரை சேர்ந்த 3 பேர் மற்றும் செல்வபுரம், பீளமேடு, உக்கடம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மொத்தம் 228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள், இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி, கோவை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 224 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் கொரோனா தொற்றினால் கடந்த 3-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று அதிகாலை உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல உக்கடம் பகுதியை சேர்ந்த முதியவரும் கொரோனா தொற்றினால் நேற்று முன்தினம் இரவு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உக்கடம் பகுதியைச் சேர்ந்த 89 வயது முதியவரும் தொற்றினால் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அதேபோல் கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். இதன்மூலம் கோவையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com