திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் அதிகாரிகளை வைத்து கதவை பூட்டினர்

திருத்துறைப்பூண்டி அருகே வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டாததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் அதிகாரிகளை வைத்து கதவை பூட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் அதிகாரிகளை வைத்து கதவை பூட்டினர்
Published on

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் என ஏராளமானோர் வேட்பு மனுக்களை பெறுவதற்காக திரண்டு வந்தனர்.

வேட்பு மனுக்களை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட நேரத்திற்குள் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வரவில்லை. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் நண்பகல் 12 மணிக்கு பிறகு வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.

நேற்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டப்படும் என்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வேட்பாளர் பட்டியலை ஒட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனாலும் பட்டியல் ஒட்டப்படாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் இருந்த தேர்தல் அதிகாரி லட்சுமி பிரபா, திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி ஆகியோரை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டினர்.

அப்போது அவர்களிடம் கூட்டுறவு சங்க ஊழியர்கள், இன்னும் அரை மணி நேரத்தில் வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படும் என்று கூறினார்கள். இதனையடுத்து கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பூட்டி இருந்த பூட்டை அவர்கள் திறந்து விட்டனர். ஆனால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் வாக்குறுதி கொடுத்தபடி அரை மணி நேரத்திற்கு பின்னரும் பட்டியல் ஒட்டப்படாததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீண்டும் அலுவலகத்தை 2-வது முறையாக பூட்டு போட்டு பூட்டினர்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் சிலரும் உள்ளுக்குள் மாட்டிக்கொண்டனர். இதனையடுத்து இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பாலாஜி(திருத்துறைப்பூண்டி), இனிகோ திவ்யன் (முத்துப்பேட்டை) ஆகியோர் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்திற்கு ஆடலரசன் எம்.எல்.ஏ.வும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வேட்பாளர் பட்டியல் ஒட்டினால்தான் தாங்கள் அங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறிய அவர்கள் அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணி வரையிலும் இந்த போராட்டம் நீடித்தது. 10 மணிக்கு பின்னர் தேர்தல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூறினார்கள். இதனையடுத்து அங்கு திரண்டு இருந்த அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காலை 10 மணி முதல் இரவு வரையிலும் தேர்தல் அதிகாரி மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com