

கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கிள்ளுக்கோட்டை அருகே நண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீமன் குளத்தின் கரையில் சில மாதங்களுக்கு முன்பு நீர்வரத்து பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது சில முழு உருவ கற்சிலைகள் வெளிப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த தொல்லியல் ஆய்வு கழக தலைவர் ராஜேந்தின், நிறுவனர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் அந்த பகுதியில் களஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 8-ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான சிற்பங்களும், பராந்தக சோழன் காலத்து கற்றளிக்கோவிலின் கற்கலசமும், ஆவுடையும், ஆட்சியை குறிக்கும் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அதே பகுதியின் சற்று அருகே சமணதீர்த்தங்கரர் கற்சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது:-
கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் எல்லை பகுதியாக அமைந்து உள்ள நண்டம்பட்டி கிராமத்தின் ஒரு பகுதி புதுக்கோட்டை மாவட்டம் செங்களூர் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி ஊராட்சியிலும் அமைந்து உள்ளது. இந்த பகுதியில் உள்ள குடுக்கன் தரிசு என்ற இடத்தில் ஏராளமான இடைக்காலத்தைய பானை ஓடுகள் விரவி கிடக்கின்றன. இதே பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே கட்டுமான குவியல்களும், செங்கற்களும் காணமுடிகிறது.
இதன்மூலம் அடித்தளம் முதல் கலசம் வரை முற்றிலும் கருங்கல்லை கொண்டு எழுப்பப்பட்ட கற்றளிக்கோவில் வழிபாட்டில் இருந்து வந்து உள்ளது. இது முற்கால சோழர் கலைபாணியில் கோவில் கட்டுமான மரபுகளை பின்பற்றி கட்டப்பட்டு இருப்பதை மண்ணில் புதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட விமான கற்கலசம், தூண்கள் மற்றும் தூண்களை தாங்கிப்பிடிக்கும் வகையில் அடித்தளமாக அமைக்கப்பட்ட 2 அடி உயரம் உள்ள வட்ட வடிவிலான உருளைக்கற்கள், கோவிலின் விமானத்தின் புறச்சுவர் விளிம்புகளில் அமைக்கப்பட்ட குரங்கு மற்றும் தேவகணங்களின் உடைந்த தலைப்பகுதிகள் ஆகியவற்றின் மூலம் இவ்விடத்தில் ஒரு முழுமையான கற்றளிக்கோவில் இருந்து உள்ளதை உறுதி படுத்த முடிகிறது.
இதுமட்டுமின்றி மண்ணில் புதைந்த நிலையில் முட்புதர்களுக்கு இடையே ஏராளமான சிற்பங்களும் இருப்பதை காண முடிகிறது. எங்களால் அடையாளம் காணப்பட்டு உள்ள வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷங்களை மேலும் சிதைந்து விடாதபடி பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கை எடுத்து, இந்த இடத்தில் அகழாய்வை மேற்கொள்ளவும் தொல்லியல் துறை முன் வரவேண்டும் என்றார்.