ஆம்னி பஸ் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி-கார் மீது மோதியதில் 4 பேர் படுகாயம்

ஆம்னி பஸ் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, எதிரே வந்த கார் மீது மோதியதில், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆம்னி பஸ் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி-கார் மீது மோதியதில் 4 பேர் படுகாயம்
Published on

திண்டிவனம்,

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டு இருந்தது. ஆம்னி பஸ்சை தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த டிரைவர் பெஞ்சமின்(வயது48) ஓட்டிச்சென்றார். ஆம்னி பஸ் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதற்கு முன்னால் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு ஒரு டேங்கர்லாரி சென்று கொண்டு இருந்தது. அதனை சங்கராபுரம் அறம்பட்டை சேர்ந்த டிரைவர் பழனி(40) ஓட்டினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னிபஸ் முன்னால் சென்று கொண்டு இருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதனால் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி எதிர் திசையில் சென்னையிலிருந்து துறையூருக்கு சென்று கொண்டிருந்த கார் மீது மோதி, பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. டேங்கர் லாரி மோதியதில் கார் பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த சென்னை சைதாப்பேட்டையைச்சேர்ந்த வங்கி அலுவலர் தேவேந்திரன்(32), அவரது மனைவி திவ்யபிரியா(30), குழந்தைகள் ரிஷி(6), பிராக்(1) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கித்தவித்த 4 பேரையும் மீட்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து திண்டிவனம் தீயணைப்பு படையினரும், ஒலக்கூர் போலீசாரும் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தால் திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com