

பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளின் தொடக்க விழா நேற்று மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார்.
விழாக்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொண்டு, ரூ.5.72 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை மேம்பாட்டு பணிகள், சிறுபாலம் அமைத்தல், அங்கன்வாடி மையம் அமைத்தல், வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடம் கட்டும் பணி, பொது வினியோக கடை கட்டிடம் கட்டும் பணிகளை பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பள்ளிபாளையம், சமய சங்கிலி அக்ரஹாரம் ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.18.34 லட்சம் மதிப்பீட்டில் 3 தெருக்களில் வடிகாலுடன் கூடிய சிமெண்டு கான்கிரீட் சாலை மற்றும் சிறுபாலம் அமைத்தல் பணி, பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் 8 தெருக்களில் மொத்தம் ரூ.44.15 லட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய பேவர்பிளாக் சாலை மற்றும் வடிகாலுடன் கூடிய சிமெண்டு கான்கிரீட்தள சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதேபோல களியனூர், குப்பாண்டபாளையம், கோட்டமேட்டு, தட்டாங்குட்டை, வேமன்காட்டு வலசு, பல்லக்காபாளையம், பாதரை, எலந்தக்குட்டை, புதுப்பாளையம் அக்ரஹாரம், காடச்சநல்லூர், பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, தேவனாம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் ஆகிய ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள், 1 ஆய்வக அறை உட்பட மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே கழிப்பிட வசதியுடன் கூடிய 3 தளங்களை கொண்ட கூடுதல் கட்டடம் கட்டும் பணியினையும் அமைச்சர் தங்கமணி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். மொத்தம் ரூ.5.72 கோடி மதிப்பீட்டிலான பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
விழாக்களில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், சேலம் - நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் சின்னுசாமி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் சுப்பிரமணியம், பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி உள்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், அரசு துறை அலுவலர்கள் மற்றும் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.