தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ வீரர்கள் திருச்சி வந்தனர்

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ வீரர்கள் ரெயிலில் திருச்சி வந்தனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ வீரர்கள் திருச்சி வந்தனர்
Published on

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிவிடும். தேர்தல் வாக்குப்பதிவிற்கான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்படும் பணம், பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படை வீரர்கள் வருகை தருவார்கள் என தமிழக தலை மை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். அதன்படி திருச்சிக்கு முதல் கட்டமாக ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் நேற்று அதிகாலை வந்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 85 பேர் ரெயிலில் புறப்பட்டு சென்னை வந்தனர். சென்னையில் இருந்து ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் நேற்று அதிகாலை திருச்சி வந்தனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அவர்களை மாநகர போலீசார் வரவேற்றனர்.

துணை ராணுவ படையினர் துப்பாக்கிகள், பாதுகாப்பு கவசங்கள், தாங்கள் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தும் உபகரணங்களுடன் வந்தனர். மேலும் தாங்களே சமைத்து சாப்பிடுவதற்கு வசதியாக அதற்கான பொருட்களையும், சமையல் அடுப்புகளையும் கொண்டு வந்திருந்தனர். அவை அனைத்தையும் மாநகர போலீஸ் வேனில் ஏற்றி வைத்தனர். மேலும் துணை ராணுவ படையினர் 85 பேரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை போலீஸ் மைதானத்திற்கு வேனில் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சியில் எந்த பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பதை தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்த உள்ளனர். சோதனை சாவடிகளிலும், கலெக்டர் அலுவலகம் முன்பும், பறக்கும் படை அதிகாரிகளுக்கு உதவியாகவும் துணை ராணுவ வீரர்களுக்கு பணி ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. இதேபோல துணை ராணுவ படையினர் மேலும் 3 கம்பெனிகள் வரை திருச்சிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com