சிறுவர் பூங்காவை இரவு 10 மணி வரை திறந்திருக்க கோரி கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு

சிறுவர் பூங்காவை இரவு 10 மணி வரை திறந்திருக்க கோரி பெரம்பலூர் மக்கள் மேடை அமைப்பினர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சாந்தாவை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுவர் பூங்காவை இரவு 10 மணி வரை திறந்திருக்க கோரி கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் சாந்தா, மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர்.

இந்த நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், பிற விளையாட்டுகள் விளையாடுவதற்கும் மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், சிறுவர் பூங்காவை இரவு 10 மணி வரை திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் பெரம்பலூர் மக்கள் மேடை என்கிற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கருணாகரன் தலைமையில் அந்த அமைப்பினர் நேற்று காலை கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அலுவலகம் முன்பு கூடியிருந்தனர்.

பின்னர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மனு கொடுப்பதற்காக அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நுழைந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் கலெக்டரிடம் மனு கொடுக்க செல்ல வேண்டும் என்றால் சிலர் மட்டும் செல்ல வேண்டும், கூட்டமாக செல்லக்கூடாது என்றனர். இதனால் மனு கொடுக்க சென்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரின் உத்தரவை மீறி கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க கூட்டமாக சென்றனர்.

அப்போது குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்த கூட்டரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், போலீசாரை கண்டித்து கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதனை கண்ட கலெக்டர் சாந்தா அவர்களை உள்ளே அனுமதிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். உள்ளே வேகமாக சென்ற பெரம்பலூர் மக்கள் மேடை அமைப்பினர் கலெக்டர் சாந்தாவை முற்றுகையிட்டு சிறுவர் பூங்காவை இரவு 10 மணி வரை திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கும், விளையாட்டுகள் விளையாடுவதற்கும் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்களிடம் கலெக்டர் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

சமூக நீதி மாணவர் இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பாவேஜ் பாஷா தலைமையில், அந்த இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், கோடை விடுமுறையில் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வேப்பந்தட்டை தாலுகா தழுதாழை-பெரியம்மாபாளையம் செல்லும் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க தழுதாழை கிராம பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது அவர்கள் கூட்டமாக மனு கொடுக்க சென்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போலீசாரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அழைத்து சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்தனர்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தம் 258 மனுக்கள் கலெக்டர் வாங்கினார். பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com