ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்தவரின் வீட்டை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

கணியூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்து தலைமறைவானவரின் வீட்டை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்கள்.
ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்தவரின் வீட்டை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
Published on

கணியூர்,

கணியூர் அருகே உள்ள துங்காவி உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 45). இவர் உடுமலை அரசு போக்குவரத்து கழக கிளையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் துங்காவி பகுதி பொதுமக்களிடம் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவர் அதே பகுதியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் குடியிருந்து வந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை நம்பி சீட்டு பணம் செலுத்தி வந்தனர். அதாவது மாதம் ரூ.1000 செலுத்தினால் 63 மாதங்களுக்கு பிறகு ரூ.90 ஆயிரம் கிடைக்கும் என்று கூறி வசூல் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ரூ.1 கோடி வரைவசூல் செய்து விட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவருடைய வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.

பின்னர் அவர் தலைமறைவாகி விட்டாலும் அவருடைய வீடு இருப்பதால் ஊருக்கு வரும்போது வீட்டை பணம் செலுத்துவார் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் இருந்தனர். இந்த நிலையில் அந்த வீட்டை வேறுநபர் ஒருவருக்கு ஈஸ்வரன் விற்று விட்டதாக அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நேற்று முன் தினம் இரவு ஈஸ்வரன் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடி, கதவு, ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்கள். பின்னர் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினார்கள்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com