மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி அமாவாசை தீர்த்தவாரி பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர்.
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி அமாவாசை தீர்த்தவாரி பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்
Published on

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான துலா உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு தர்ப்பை புல் மற்றும் பட்டு அணிவிக்கப்பட்டு ரிஷப கொடிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதைப்போல மயிலாடுதுறையில் உள்ள ஐயாரப்பர் கோவில், வள்ளலார் கோவில், காவிவிஸ்வநாதர் கோவில், ஆகிய கோவில்களிலும் துலா உற்சவத்தையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் மயூரநாதர்- அபயாம்பிகை, வதாண்யேஸ்வரர்-ஞானாம்பிகை, ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி, காசிவிஸ்வநாதர் - விசாலாட்சி ஆகிய சாமிகள் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு காவிரி துலா கட்டத்தை அடைந்தனர்.

தொடர்ந்து துலா கட்டத்தின் வடகரை, தென்கரை பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அஸ்திரதேவருக்கு காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது அஸ்திரதேவர் காவிரி ஆற்றில் மூழ்கி ஆறாட்டு நடைபெற்ற போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ சிவ என்ற சரண கோஷத்துடன் காவிரியில் புனித நீராடினர். இதில் தருமபுரம் ஆதீனம் இளையசன்னிதானம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருவாவடுதுறை அம்பலவாண கட்டளை தம்பிரான் சுவாமிகள், ஆகியோர் கலந்து கொண்டு பக்தர் களுக்கு ஆசி வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com