ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் இங்குள்ள அருவியில் புனித நீராடிவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்
Published on

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலா தலமாக சுருளி அருவி திகழ்கிறது. கம்பத்தில் இருந்து 10 கி.மீ. தொலையில் சுருளி அருவி உள்ளது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்து சுருளி அருவியாக கொட்டுகிறது.

இங்கு குளித்தால் நோய் குணமாகும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சுருளி அருவி மற்றும் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று ஆடி அமாவாசை என்பதால் சுருளி அருவிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். பின்னர் அவர்கள் அருவியில் புனித நீராடிவிட்டு இறந்த முன்னோர்களுக்கு சுருளி ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து அங்குள்ள சுருளிவேலப்பர், கைலாசநாதர்கோவில், விபூதி குகைகோவில், ஆதி அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று குச்சனூர் சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த பக்தர்களும் சுருளி அருவிக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது.

சுருளி அருவிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுருளி அருவிக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் சுருளிப்பட்டியில் இருந்து மாற்று வழியில் திருப்பி அனுப்பினார்கள். மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com